Leave a comment

Natural Fertilizers

இயற்கை உரங்கள்:-

மண் வளத்தை மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம்;

மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத்தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

விவசாய நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண் வளம் குன்றிவிடும். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மண் வளத்தை அதிகபடுத்த சத்துக்களைச் சரியான அளவில் அளிக்க வேண்டும்.

ரசாயண உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணிலுள்ள நுண்ணியிரிகளையும் மண்புழுக்களையும் அழிக்கின்றன.

நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வளமற்ற மண்ணில், ரசாயன உரங்கள் இடும்போது அவற்றின் முழுப்பயனும் பயிர்களை சென்றடைவதில்லை. இதனால் தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எவ்வளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும் விளைச்சல் அதிகரிக்காததுடன், இடுபொருட்களுக்கான செலவும் குறைவதில்லை.

மேலும் உயிரற்ற மண்ணில் வேளாண்மை செய்வதால் லாபம் இருக்க முடியாது. மண்ணுக்கும் உயிருண்டு என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.

மண் வளத்தை அளிக்கும் காரணிகள்:

மண்ணில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் உள்ளன. மேலும் மண் புழுக்கள், கரையான், மண் வாழ் பூச்சியினங்களும் உள்ளன. இவையே மண்ணின் இயற்கை சூழலைப்பாதுகாக்கின்றன.

இந்த நுண்ணியிரிகள் மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் மண்ணில் இடும் தொழு உரம், பசுந்தாள் உரம் பண்ணைக்கழிவுகள் மீது செயல்பட்டு, அவற்றை உணவாக பயன்படுத்தி, மக்கச் செய்து மண் வளத்தை பெருக்குகின்றன.

எனவே, மண்ணில் இயற்கையாக மக்கும் பொருள்கள் இல்லையென்றால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறையும். மண்ணில் ஒரு பாக்டீரியா செல்லானது 15 முதல் 20 நிமிஷங்கள் இரண்டாக உடையும். ஒரு நாளில் அவை பல மில்லியன்களாக மாறுகின்றன.

ஆனால், இயற்கை வளங்கள் ஏதுமற்ற நிலையில் பாக்டீரியாக்கள் இறந்து விடும். அல்லது உறக்க நிலைக்கு சென்று விடும். இவை அங்ககப்பொருட்களை மக்கச் செய்து, மண்ணிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், காற்றிலுள்ள தழைச்சத்தை உள்வாங்கி, மண்ணில் நிலைநிறுத்தி, பயிர்களுக்கு அளிக்கின்றன. எனவே மண் வளத்தை பாதுகாக்க அதிக அளவில் இயற்கை உரங்கள் அதாவது கரிமக் கார்பனை மண்ணில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். மண் இயற்கையாக அதிக கரிம ஊட்டத்தோடு இருந்தால், மண்ணில் இடும் எந்த உரத்தையும் இழப்பில்லாமல் சரியான வகையில் பயிர் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் வயலிலேயே தயாரிக்கக்கூடிய சில இயற்கை வழி உரங்களை காண்போம்.

பண்ணைக்கழிவுகள் :

அன்றாடம் பண்ணையில் பலவகையான திடக்கழிவுகள் உண்டாக்குகின்றன. இவற்றில் இலைச் சருகுகள், மாட்டுத் தொழுவக்கழிவுகள், பயிர்க்கழிவுகள் மிகுதியாக உள்ளன. அவற்றை நுண்ணுயிர்களின் உதவியால் மட்கச்செய்து பயிர்ச்சத்து நிறைந்த இயற்கை உரமாக மாற்றலாம்.

தொழு உரம்:

கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை மட்கச்செய்து பயன்படுத்துவது தொழு உரம். மாடுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 கிலோ சாணத்தையும், 6-7 லிட்டர் சிறுநீரையும் கழிக்கின்றன.

இவ்வாறாக ஓராண்டுக்கு 3.5 டன் சாணமும், 2500 லிட்டர் சிறுநீரும் ஒரு மாட்டிலிருந்து கிடைக்கின்றன. மாட்டின் சாணத்தைவிட சிறுநீரில் தான் தழைச்சத்து 50 சதமும், சாம்பல் சத்து 25 சதமும் அதிகம் உள்ளன. மக்கிய தொழு உரத்தில் ஒவ்வொரு 100 கிலோவிலும் தழைச்சத்து 500 கிராமும், மணிச்சத்து 300 கிராமும், சாம்பல்சத்து 500 கிராமும் உள்ளன.

ஆட்டு எரு:

எந்த இன ஆடும் சராரசியாக நாள் ஒன்றுக்கு 300 கிராம் புழுக்கைகளையும், 200 மிலி சிறுநீரையும் கழிக்கின்றன. ஆட்டு எருவில் 100 கிலோவிற்கு ஒரு கிலோ தழைச்சத்து உள்ளது. தொழு எருவை விட அதிக பயிர்ச்சத்துக்கள் உள்ளன. எனவே ஆட்டுப்பட்டிகளை வயலில் அமைத்து எருவை மண்ணில் சேமிக்கலாம். இந்த ஆட்டுக்கழிவை சாண எரிவாயுக்கலன்களிலும் பயன்படுத்தி, எரி சக்தியோடும் நல்ல இயற்கை உரத்தையும் பெறலாம்.

சாண எரிவாயுக்கழிவு:

சாணத்தை வரட்டியாக தட்டாமால் எரிவாயுக்கலன்களில் பயன்படுத்துவதால் மீத்தேன் வாயு என்ற எரிசக்தி கிடைப்பதுடன் சத்துக்கள் நிறைந்த சாண எரிவாயு கழிவும் கிடைக்கிறது. ஓராண்டு முடிவில் கிடைக்கும் கழிவில் 44.5, 65.9, 28 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரம் கிடைக்கின்றன. [3 பசு, 2 கன்றுகள்] இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர் போன்ற நுண்ணூட்டங்களும் இதில் உள்ளன.

பயிர்த்தட்டைகள்:

நெல், பயிர்த்தடைகளும் பயிரூட்டச்சத்துக்கள் கொண்டவை. இவற்றை நிலத்தில் உழுதுவிட்டால் அங்ககப்பொருட்களின் அளவு அதிகரிப்பதுமட்டுமல்லாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும். கரும்பு அடிக்கட்டைகளும் வேர்களும், வயல்களில் இருந்து ஹெக்டேருக்கு 13.5 டன் வரை கிடைக்கின்றன. இவற்றை ரோட்டோவேட்டர் கலப்பையைக்கொண்டு பொடி செய்து மண்ணில் கலந்தால் நல்ல கனிம எருவாக மாறுவதோடு ஹெக்டேருக்கு 14 கிலோ தழை, 5 கிலோ மணி மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தை வயலுக்கு அளிக்கமுடியும்.

மண் புழு மக்கு உரம் :

மண் புழுக்களை பயன்படுத்தி இலை, தழை, கால்நடைக்கழிவுகளை மட்கச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் பேரூட்டச்சத்துக்கள் மட்டுமல்லாது கரிம பொருட்கள், நுண்ணுயிரிகள், கிரியா ஊக்கிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது நடுநிலையுள்ள அமில, காரத்தனமையைக் கொண்டுள்ளதால், மண்ணில் உள்ள பேரூட்ட, நுண்ணூட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

பசுந்தாள் உரங்கள்:

செஸ்பேனியா, கொளுஞ்சி, சணப்பு, பில்லிபெசரா, அகத்தி போன்ற பயிர்களை வளர்த்து, பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். மேலும் வேம்பு, புங்கம், கிளிசிடியா, எருக்கு இலைகளையும் சாலையோர தரிசு நிலங்களில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளையும் வெட்டி, நிலத்தில் இடுவது பசுந்தால் உரமாகும்.

இதன் மூலம் விழிப்புணர்வைப் பெரும் விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி, மண் வளத்தை காப்பதோடு சுற்றுச்சூழலையும் காத்து, அனைத்து இனங்களுக்கும் நஞ்சில்லா உணவு வழங்க முன் வர வேண்டும்.

பசுந்தாள் உரம்:-

நடவடிக்கைகள்:

இந்திய வேளாண்மையில் நவீன சாகுபடித் தொழில்நுட்பத்தின் மூலமும், உயர் விளைச்சல் ரகங்கள் மூலமும் உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்ததால், தன்னிறைவு பெறலாம்.

இருப்பினும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவதாலும், மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும்.

மண்ணில் சேரும் கரிமப் பொருள்களால் மண் புழுக்களின் வளர்ச்சியும், தழைச் சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும், மண் இயல்பு அடர்த்தி குறைகிறது. அதனால், உழுவது முதல் விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி, நீர்ப்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.

பசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், செடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது. பசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.

பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. பசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது.

மேலும், அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது. பசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.

நெல் வயலில் நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது. அவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால், மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.

சணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும், தக்கைப் பூண்டில் 10 டன் உயிர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும், மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும் மற்றும் கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும்.

நன்றி: தினமணி நாளிதழ்.

தொகுப்பு: வானக வானம்பாடிகள் முகநூல் குழு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: