2 Comments

வானகம் – இயற்கை வாழ்வியல் பயிற்சி

வானகத்தில் நடந்த இயற்கை வாழ்வியல் பயிற்சிக்காக 5 நாட்கள் சென்று இருந்தேன்.நிறைய ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டனர் புதுவித அனுபவமாக இருந்தது. இந்த பயிற்சியில் நாங்கள் கற்றதை,மற்றவர்களுக்கும் தெரிவிக்கும் பொருட்டு ஒரு பதிவாக எழுதி உள்ளேன்.சற்று நீண்ட நெடிய பதிவு! இருப்பினும் அனைவருக்கும் வானகம் பயிற்சி பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும் என நம்புகிறேன்.அய்யாவின் சிறப்பே எவருக்கும் எளிதில் புரியும் வகையில் உண்மையை எடுத்துரைப்பது!அந்த வழிமுறையிலேயே வந்திருந்த அனைவருக்கும் புரியும் வகையில் பயிற்சி அமைந்தது.பயிற்சி எடுத்த அனைவருமே தங்களின் அனுபவங்களை அவ்வளவு அழகாக எடுத்துரைத்தனர்.5 நாட்களும் அய்யா எங்கள் உடன் இருந்த உணர்வை தெளிவாக உணர முடிந்தது.வானகத்தில் உள்ள தன்னார்வு தொண்டர்கள் அந்த உணர்வை அளித்தனர்.

vanagaram training 1

பண்ணையின் அமைப்பு:
பாறைகள் மிகுந்த மானாவரி நிலத்தை இயற்கையின் புரிதலோடு முயற்சி செய்தால் அனைத்து உயிர்களும் வாழக்கூடிய பல்லுயிர் சோலையாக மாற்ற இயலும் என்பதை அய்யா நமக்கு கற்றுகொடுதுவிட்டு சென்றுள்ளார்.வானகத்தில் பண்ணை முழுவதும் மழைநீர் வீணாகாதபடி, அகழிகள் அமைத்து ,பண்ணைகுட்டைகள் அமைத்து நீரை சேகரித்து வருகின்றனர்.மேலும் சில இடங்களில் வட்டபாத்தி முறையில் உழாத வேளாண்மையை செய்து வருகின்றனர்.பண்ணை முழுவதும் ஏராளமான மருத்துவ குணமிக்க செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து வருகின்றனர்.மேலும் அசோலா வளர்ப்பு,மண்புழு வளர்ப்பு மற்றும் உயிர்வேலிகள் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.வெறும் பயிற்சியோடு நில்லாது,நிலத்தில் இறங்கி வேலை செய்ததால் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.வேளாண்மையில் மூடாக்கு எந்த அளவு பயனுள்ளது என்பதை பற்றியும் முழுமையாக அறிந்தோம்.

vanagaram training 2

வேளாண்மை:
கடந்த 40 ஆண்டுகளில் பசுமை புரட்சியினால் ஏகப்பட்ட விளைவுகளை சந்தித்து வருகிறோம்.சோற்று பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டு வந்தோம் என கூறினார்கள்.ஆனால் இன்று ஒட்டுமொத உயிர் சுழற்சியையே பசுமை புரட்சிக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கிறோம்.வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை முறை.வருமானத்தை மட்டுமே முதலீடாக வைத்து இயங்க இயலாது.தன்னிச்சையான ,சுயசார்புள்ள இயற்கை வேளாண்மையை நோக்கி செல்வதன் மூலமே ,உழவையும் உழவனை காப்பாற்ற முடியும் என்பதை பயிற்சி உணர வைத்தது.பஞ்சகாவ்யா ,அமிர்தகரைசல் ,மீன் அமிலம் ,மற்றும் மூலிகை பூச்சிவிரட்டி பற்றி தெளிவாக எடுதுரைததோடு அல்லாமல் ,செய்முறை விளக்கங்களும் செய்து காட்டினர்.

நவீன யுகத்தின் வளர்ச்சி மோகம் ,நம்மை இயற்கையைவிட்டு வெகுதூரத்திற்கு அழைத்து சென்று விட்டது என்ற உண்மையை உணர முடிந்தது.இன்று வேளாண்மை செய்வதற்கு 90% பொருட்களை வெளியில் இருந்தே வாங்குகிறோம்.முதலில் அதனை குறைக்க வேண்டும்.மண் உயிருள்ள ஒரு ஜீவன்.அதனை இன்று நாம் ரசாயன உரங்களையும் ,பூச்சிகொல்லிகளையும் தெளித்து மலடாக்கி வருகிறோம்.அதிக மகசூல்,பச்சை பசேல் என்ற சொல்லுக்கு நாம் அடிமையாகிவிடோம்.அதன் விளைவு நம் மண்ணை உயிரற்ற ஜடமாக மாற்றிவிட்டோம்..உலகநாடுகளில் தடைசெய்யப்பட்ட பெரும்பாலான பூச்சிகொல்லி மருந்துகள் இங்கு மட்டுமே சுதந்திரமாக உலாவுகிறது என்பதை நாம் அறிய தவறி விட்டோம் .எல்லோருக்கும் உணவு என்பது ,உற்பத்தியால் வருவது அல்ல! உணவு எவ்வாறு பகிர்ந்தளிக்கபடுகிறது என்பதை பொறுத்தே என அய்யா கூறுவார்! அந்த புரிதலை நாம் அடைந்தால் போதும்.

vanagaram training 3

மருத்துவம்:
பயிற்சியின் போது காசி பிச்சை மற்றும் மாறன் ஜி அய்யா நவீன மருத்துவத்தில் உள்ள குறைபாடுகளை ,ஏமாற்று வித்தைகளை தெளிவாக எடுத்துரைத்தார்கள். நமது முன்னோர்கள் கையாண்ட மூலிகை செடிகளில் எல்லாவித நோய்களுக்கும் மருந்து உள்ளது எனவும் ,சிறந்த உணவு முறையை கையாளுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும் வழிமுறைகளை கூறினார்கள்.இன்று இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டுள்ள நீரழிவு நோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு காரணம் ,நமது பண்டைய இயற்கை உணவுமுறைகளை அறவே தவிர்த்துவிட்டு ,ரசாயனம் கலந்து உணவை ,குளிர்பானங்களை ,மேல்நாட்டு குப்பைகளை உண்டதே என்றே உண்மையை அனைவருக்கும் எடுத்துரைத்தனர்.

புற்றீசல் போல் முளைத்து இருக்கும் மருத்துவமனைகள் இன்று எந்த அளவிற்கு நம்மை அழிவு பாதைக்கு இட்டு செல்கிறது என்பதை நமது அன்றாட வாழ்கையில் நடைபெறும் சம்பவங்களை வைத்தே உண்மைகளை எடுத்துரைத்தனர்.இங்கு பெரும்பாலான நோய்கள் தானாக உருவாவதில்லை .பன்னாட்டு முதலைகளின் சூழ்ச்சியினால் உருவாக்கபடுகிறது என்பதை உணர முடிந்தது.பெரும்பாலான நோய்களுக்கு நமது வீட்டு மருத்துவமே ஆகச் சிறந்தது என்பதை நமது மனம் உணர மறுக்கிறது.இந்த நவீன யுகம் மாத்திரையும் ,ஊசியுமே நமது மிகசிறந்த வலிநிவாரணி என்பதை நமது மனதில் ஆணித்தரமாக பதிய வைத்து விட்டனர்,

vanagaram training 5

உணவுமுறை :
எந்த உணவை எடுத்துகொள்வது மட்டுமின்றி எப்படி உண்பது என்பதையும் இங்குதான் கற்று கொண்டோம்.இன்று நாம் உண்ணும் உணவில் பெரும்பாலானவை நச்சுகலந்தவையே.காலையில் பல்துலக்குவது முதல் இரவு உறங்குவதற்கு முன் அருந்தும் பால் வரை நச்சு கலந்த உணவையே நாம் உண்டு வருகிறோம் என்பதனை தெளிவாக எடுத்துரைத்தனர்.நமது பாரம்பரிய உணவுகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு ,நமது உடலுக்கு ஒவ்வாத உணவையே உண்டு வருகிறோம்! நாம் வேகமாக இயங்கி கொண்டு இருக்கிறோம் என கூறிக்கொண்டே 10 நிமிடத்தில் உணவை உண்டு கழிக்கிறோம்.”உணவை குடி ” நீரை உண் ! என்பதே நமக்கான பாரம்பரிய உணவு பழக்கம் என்பதனை தெரிந்து கொள்ள முடிந்தது.உணவே சிறந்த மருந்து என்பதனை அங்குதான் முதன்முதலில் உணர்ந்து கொண்டேன்.

பூச்சிகள் நம் நண்பன்:
அடுத்ததாக பூச்சி செல்வம் அய்யாவை பற்றி கூற வேண்டும்.பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது என்பதனை அவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தார்.பூச்சிகள் நமக்கான எதிரிகள் என்ற தவறான மாயையை உடைதெரிந்து,அவைகள் நண்பர்கள் மட்டுமின்றி மனித இனமே அதன் மூலம் தான் இயங்குகிறது என்ற அடித்தளத்தை எடுத்துரைத்தார்.எதற்காக ரசாயனம் தெளிகிறோம் என்பதனை தெரியாமலேயே ஒரு விவசாயி ,தனது நிலத்தை பாலக்குகிறார்.பூச்சியை கட்டுபடுதுவதற்க்கு வயல்களில் அடிக்கபடுவது பூச்சிகொல்லி அல்ல.அவை நமக்கான உயிர்கொல்லி என்பதை தெளிவான விளக்கங்களுடன் எடுத்து உரைத்தார்.

உலகில் முதன்முதலில் கொசுவை கொள்வதற்கே பூச்சிகொல்லி கண்டுபிடிக்க பட்டது.அதற்கு நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது .ஆனால் முன்பு இருந்ததைவிட இன்று கொசுக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதனை நாம் மறுக்க இயலாது.கொசுவை பிடித்து தின்னும் தட்டான்களை ,தவளைகளை நாம் முற்றிலும் அளித்து விட்டோம்.இயற்கையில் எல்லாவற்றிற்கும் தீர்வு படைக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் தெரியாமலேயே ,இந்த பன்னாட்டு ரசாயன தொழிற்சாலைகளின் லாபவெறிக்கு பலியாகி கொண்டு இருக்கிறோம்.ஒவ்வொரு தீமை செய்யும் பூச்சிகளுக்கும்,இணையாக நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையில் படைக்கப்பட்டு உள்ளன என்ற உண்மையை அறியாமல் ,ரசாயனங்களை தெளித்து மொத்த பூச்சி இனங்களையும் அளித்து வருகிறோம்.

தேனீக்கள்:
தேனீக்கள் பற்றிய வகுப்பு வந்திருந்த அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஈக்கள் இனத்தை சேர்ந்த தேனீக்கள் வாழ்வில் அளப்பரிய ஆச்சரியங்கள் பொதிந்து உள்ளதை உணர முடிந்தது.நாம் அருந்தும் ஒவ்வொரு சொட்டு தேனுக்கும் பின்னால்,பல்லாயிர கணக்கான தேனீக்களின் அளபரியான உழைப்பு உள்ளதை உணர முடிந்தது.அவற்றிற்கு நன்றிகடனாக ரசாயனங்களை தெளித்து அதன் இனத்தை அழித்து வருகிறோம் .ஒவ்வொரு மனிதனும் தேனீக்களின் வாழ்கை முறையை முழுவதுமாக படிக்க வேண்டும்.கூடு கட்டுவது முதல்,பூக்களில் மகரந்தத்தை சேகரிக்க அவைகள் கையாளும் முறைகள் வரை ,எந்த தொழில்நுட்பத்தையும் மிஞ்சும் மதிநுட்பம் உடையது.தேனீக்கள் கொட்டினால் பயந்து ஓடும் நாம் ,பயிற்சிக்கு பிறகு,இனி தேனீக்களை தேடி கொட்டு வாங்கும் அளவிற்கு அருமையான கருத்தாக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

சிறுதானியங்கள் :
மருதையன் அண்ணன் எடுத்த சிறுதானிய வகுப்பு ,சிறுதானியங்கள் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது.இக்கால தலைமுறைகளுக்கு அரிசியை தவிர எதுவும் தெரியாத அளவிற்கு நாம் சிறு தானியங்களை மறந்து மருத்துவத்திற்கு அடிமையாகி விட்டோம் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.மானாவாரி நிலங்களுக்கு சிறு தானியமே சிறந்தது எனவும்,அவையே சத்துக்கள் நிறைந்து உணவு எனவும் கூறினார்.பண்டைய காலங்களில் ,விழா நேரங்களில் மட்டுமே அரிசி சோறு சாப்பிட்டதாகவும் ,மற்ற நேரங்களில் பெரும்பாலான பகுதிகளில் சிறு தானியமே முக்கிய உணவாக இருந்தது என கூறினார்.12 வகையான சிறுதானியங்கள் பற்றியும் ,அதன் பலன்கள் பற்றியும் ,அதனை எவ்வாறு பயிர் செய்வது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

பண்ணை வடிவமைப்பு முறை :
அய்யாவுடன் நீண்ட நாட்கள் தங்கி இருந்த ஏகாம்பரம் அண்ணன் வேளாண்மை பற்றிய ஒரு முழுமையான புரிதலை எங்களுக்கு அளித்தார்.அவருடைய பண்ணை வடிவமைப்பு முறை பற்றிய வகுப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.தற்சார்பு வேளாண் முறையை அருமையாக எடுத்துரைத்தார்.எந்த உழவனும் கடனாளியாக தேவை இல்லை.ஒரு பண்ணைக்கு தேவையான அனைத்தும் அருகாமையில் இருந்தே பெற வேண்டும் எனவும் ,ஆண்டு முழுவதும் பயன்தர கூடிய பயிர்களை ,மரங்களை பயிர் செய்வதற்கான வழிமுறைகளை கூறினார்.ஒவ்வொரு பண்ணையிலும் பண்ணைக்குட்டை எந்த அளவிற்கு அவசியமானது என்பதனையும் எடுத்துரைத்தார்.

கல்விமுறை:
மேலும் மாற்று கல்வி பற்றிய சிந்தனையும் அங்கு விதைக்கப்பட்டது.இன்றைய கல்விமுறை நம்மை எந்த அளவிற்கு சீரழித்து உள்ளது என்பதனை அனைவராலும் உணரப்பட்டது.மாற்று கல்வியை (சுவரில்லா கல்வி ) நோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும் ,நமது குழந்தைகளிடம் இருந்து அதனை தொடங்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.நவீன கல்வி முறை அவர்கள் அனைவரையும் சிறைகைதிகளாக வைத்து இருக்கிறது.குழந்தைகளை அதன் சுதந்திர காற்றில் பறக்க விடுங்கள்,அவர்களுக்கு எல்லாமே தெரியும் ! நாம்தான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்! என குழந்தைகளுடான அனுபவத்தை வெற்றிமாறன் அண்ணன் அருமையாக எடுத்துரைத்தார்..வானகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நிறைய குழந்தைகள் இங்கு வந்து மகிழ்வோடு தன் பொழுதை கழிகின்றனர்.வானகம் தொண்டர் செந்தில் ,அவர்களுக்கு அருமையான சிந்தனையை விதைத்து,அவர்களுக்கு இனிமையான தருணத்தை அமைத்து தருகிறார்.வானகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எந்தவித கட்டுபாடும் விதிக்கபடுவதில்லை.அவர்கள் ,அவர்களாகவே இருக்க செய்வதே அய்யாவின் ஆசை!

இது போன்று ஏராளமான தகவல்களை நாங்கள் 5 நாள் பயிற்சியில் கற்றுகொண்டோம்.காலம் காலமாக நம்ப வைக்கப்பட்ட விசயங்கள் .பழக்கவழக்கங்களை உடைத்து உண்மையை உரைத்த போது,அவ்வளவு எளிதில் ஏற்றுகொள்ள முடியவில்லை.ஆனால் சொல்லப்பட்ட விதம்,அதிலிருக்கும் உண்மை எங்களால் உணர முடிந்தது.ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள்! அதை முதன்முதலாக வானகத்தில் தான் உணர்ந்தேன்.இடைவெளியே விடாமல் அந்த அளவிற்கு காற்றின் வேகம் இருந்தது.காற்றை தேடி ஓடும் இந்த நரக (நகர ) வாழ்கையில் ,இயற்கையான காற்றில் தவழ்ந்தோம்.5 நாட்களும் இயற்கைவகை உணவுகளே பரிமாறப்பட்டன .வாய்ப்புள்ள அனைவரும் வானகம் சென்று வாருங்கள்.புதியதொரு மாற்றத்தை உங்களுக்குள் உணர்வீர்கள்! இவை விவசாயிகளுக்கான மட்டுமான பயிற்சி இல்லை .நம் அனைவருக்குமானது .

இங்கு வெறும் வேளாண்மை மட்டும் கற்றுகொடுக்க படுவதில்லை.ஒரு முழுமையான இயற்கை வாழ்வியல் முறை பயிற்றுவிக்கபடுகிறது.வானகத்தில் இருந்து உண்மைகளை உள்வாங்கி கொண்டு ,எட்டுத்திக்கும் மக்களிடம் கொண்டு செல்வதே பயிற்சியின் நிறைவான பலனாக அமையும்.அய்யாவின் ஆசைபடி வாழும் கிராமங்களை உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.பயிற்சிக்கு பிறகு நிச்சயம் இவை நமக்கான உலகம் என்ற மாயையை கிழித்து எறிவீர்கள்!சக உயிரினங்களை ரசிக்க கற்று கொள்வீர்கள்! நல்ல உணவை தேடி செல்வீர்கள் ! உணவை ருசித்து சாப்பிட கற்றுகொள்வோம் ! வேளாண்மையின் இறுதி இலட்சியம் உற்பத்தி அல்ல ,மனிதர்களை முழுமை பெற செய்வது என்ற புகாகோவின் வாக்கியத்தின் உண்மைகளை முழுதாக உணர தொடங்குவோம்.

இந்த அருமையான நிகழ்வை நடத்திய வானகம் தன்னார்வ தொண்டர்களுக்கும் ,பயிற்சிக்கு உதவிய நபார்டு வங்கிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.இவை வானகம் பற்றி எழுத்துகளால் பதியப்பட்டது .இதன் உள்ளுணர்வை உணரவேண்டுமானால் ,நீங்கள் வானகம்தான் செல்ல வேண்டும்.பயிற்சியில் சில குறைபாடுகள் ,விரும்பத்தகாத கருத்து பரிமாற்றங்கள் இருக்கலாம்.அவை ஆக்கபூர்வமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவருக்குமான நலனாக இருக்க முடியும்.இவை எனது கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பதிவு.ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

vanagaram training 4

 

Author: தமிழ்ச் செல்வன்

Our Group: The Weekend Agriculturist

Advertisements

2 comments on “வானகம் – இயற்கை வாழ்வியல் பயிற்சி

  1. நான் ஒரு மேலாண்மை பட்டதாரி. எனக்கு விவசாயம் செய்ய ஆசை. வாகனத்தில் எவ்வாறு சேர வேண்டும்? எங்கு இருக்கிறது? உதவுங்கள்…

    • தயவு செய்து தமிழ்ச்செல்வன் அழைக்கவும். தொலைபேசி எண் 08056136769.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: